இந்திய ஆடவர் டென்னிஸ் நட்சத்திரமான லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இரட்டையர் ஆடவர் பிரிவில் எட்டு, கலப்பு இரட்டையர் பிரிவில் பத்து என மொத்தமாக 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உட்பட மொத்தம் 66 பட்டங்களை வென்றுள்ளார்.
இவர், கடந்த 1996ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இதுமட்டுமல்லாமல் ஏழு ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றவர்.
தற்போது 46 வயதாகும் பயஸ் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் களமிறங்கினார். அதில் இரட்டையர் பிரிவில் 44ஆவது வெற்றியை பதிவு செய்து டேவிஸ் கோப்பைத் தொடரில் அதிக வெற்றியைப் பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதனிடையே லியாண்டர் பயஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பதிவிட்டார். அதுமட்டுமின்றி 2020ஆம் ஆண்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அந்த ஆண்டு குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து விளையாடுவேன். எனது அணியினருடனும் ரசிகர்களுடன் அதை கொண்டாட விரும்புகிறன். எனக்கு உத்வேகம் அளித்த உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
1991ஆம் ஆண்டு அறிமுகமான லியாண்டர் பயஸ், அடுத்தாண்டுடன் டென்னிஸில் அடியெடுத்து வைத்து 30ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரித்விஷா, ரஹானே இருந்தும் சுருண்ட மும்பை... தமிழ்நாடே பரவால்ல