ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளை மையமாகக் கொண்டு 'கல்ச்சர் ஆஃப் கரப்சன்' (culture of corruption) என்ற ஆவணப்படம் வெளியானது. அப்படத்தில் உலகின் முக்கிய பளுதூக்கும் வீரர்கள் மிகவும் அரிதாகவே ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், பளுதூக்குதல் அமைப்பிலுள்ள ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இதனையடுத்து சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கடும் சர்ச்சைக்கு உள்ளாகினர். மேலும் அவர்களை விசாரிக்கும்படி வாடா, ஒலிம்பிக் கூட்டமைப்புகள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் அஜான், தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதனை சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் உர்சுலா பாப்பாண்ட்ரியா (Ursula Papandrea) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தனது முடிவு குறித்து கூறிய தாமஸ் அஜான், ' என்னால் இயன்ற அனைத்து வகையான நன்மைகளையும் நான் இந்த விளையாட்டிற்கு செய்துள்ளேன். எனக்கு பிறகு வரும் தலைவர்கள் என்னைவிட சிறப்பாகவும், செம்மையாகவும் இவ்விளையாட்டை வழி நடத்துவார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு' என்று தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியா நாட்டைச்சேர்ந்த தாமஸ் அஜான் (81), 1976ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும், அதன்பின் 2000ஆம் ஆண்டு முதல், இக்கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்த பிசிசிஐ