உலக கோல்ஃப் விளையாட்டில் 15 முறை மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ். இவர் கடந்த வாரம் சென்ற கார் ரோலிங் ஹில்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த டைகர் உட்ஸ், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டைகர் உட்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என சக கோல்ஃப் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஃபுளோரிடாவில் நடைபெற்று வரும் உலக கோல்ஃப் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற வீரர்கள், டைகர் உட்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது சிகப்பு ஜெர்சியை அணிந்து கோல்ஃப் விளையாடி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து டைகர் உட்ஸ் அவருடைய ட்விட்டர் பதிவில், “இன்று நான் தொலைக்காட்சியில் சிகப்பு சட்டை அணிந்து சக வீரர்கள் கோல்ஃப் விளையாடியதை பார்த்தது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த கடினமான நேரத்திலிருந்து மீள்வதற்கு ஒவ்வொரு வீரரும், ஒவ்வொரு ரசிகர்களும் தான் உதவுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது எஃப்சி கோவா!