2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் நடைபெறவுள்ள பல்வேறு போட்டிகளுக்கும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் ஆண்கள் வாலிபால் தகுதிச் சுற்று போட்டிகள் இத்தாலியின் பாரி நகரில் உள்ள பாலஃப்ளோரியோ (PalaFlorio) பகுதியில் நடைபெற்றது. இதில் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி - செர்பியா அணிகள் மோதின.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி அணி 25-16, 25-19, 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இத்தாலிய வீரர் இவான் ஜாய்ட்சேவ் 13 புள்ளிகளை பெற்று தனது அணிக்கு வெற்றி தேடிதந்தார்.
இதன் மூலம் இத்தாலி வாலிபால் அணி அடுத்தாண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோன்று பல்கேரியாவின் வர்னா நகரில் நடைபெற்ற மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 23-25, 19-25, 32-30, 25-16, 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் பல்கேரிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யா அணி, 25-19, 25-23, 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் வாலிபால் பிரிவுக்கு தற்போது வரை அமெரிக்கா, போலந்து, அர்ஜென்டினா, ரஷ்யா, இத்தாலி, பிரேசில், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஐந்து அணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான தொடரில் தேர்வு செய்யப்படும்.