இந்தியாவை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸால் பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபக்கம் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்துவருகின்றன. இருப்பினும் மறுபக்கம் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வு அமைப்புகள், ஆகியோரும் தங்களால் முடிந்த வகையில் நிதியுதவி செய்துவருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது கிராண்ட்மாஸ்டர் கரோனாவுக்கு நிதி திரட்டும் விதமாக ஆன்லைன் மூலம் 72 மணிநேரம் செஸ் மாரத்தான் போட்டியில் விளையாடியுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த இவர் 45 மணிநேர மாரத்தான் போட்டியில் 271 ஆட்டங்கள் விளையாடி ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 199 ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
இந்தத் தொகையானது தமிழ்நாடு அரசு நிவாரண நிதிக்கும், பிரதமரின் நிவாரண நிதிக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இனியன் தனது மாவட்டத்தின் நலனுக்காக ரூ 20,000 நிதி வழங்கியுள்ளார். இந்த மாரத்தான் போட்டியை இன்டர்நெட் செஸ் கிளப் நடத்தியது. போட்டியை நடத்துவதற்கான தளத்தை வழங்கியது மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்நுட்ப உதவிகளுக்கும் உதவியது.
271 ஆட்டங்களில் இனியன் 250 போட்டிகளில் வெற்றிபெற்றும், ஒன்பது போட்டிகளில் டிரா செய்தும் 12 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்துள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் பிலிட்ஸ் டைம் முறைப்படி நடைபெற்றன. ( ஒரு காயினை நகர்த்துவதற்கு இரு வீரர்களுக்கும் தலா மூன்று நிமிடங்கள் மற்றும் கூடுதலாக இரண்டு வினாடிகள் கிடைக்கும் முறைதான் பிலிட்ஸ் டைம் முறை). வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய இந்தப் போட்டி நேற்று மாலைதான் முடிவு பெற்றது.
வீரர்கள் ஆன்லைனில் வந்தபோது, அவர்களை ஒவ்வொருவராக இனியன் எதிர்கொண்டு பொறுமையாக விளையாடினார். இதில், தமிழ்நாடு, பெங்கால், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திர பிரேதசம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களிலிருந்தும் செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இந்திய செஸ் வீரர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, டென்மார்க், ஸ்காட்லாந்து, குவைத், சிங்கப்ப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் பங்கேற்றனர்.
72 மணிநேரத்தில் 271 போட்டிகளில் விளையாடியது குறித்து பி. இனியன் கூறுகையில், "இந்த மாரத்தான் போட்டியில் வீரர்களின் பதிவு வரிசையின் அடிப்படையில் அவர்களை எதிர்த்து நான் விளையாடினேன். இதில், சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள், சாம்பியன் பட்டம் வெல்லாத வீரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெவ்வேறு வகையான செஸ் வீரர்களுடன் ஒன்றன் பின் ஒன்றாகவும் தொடர்ச்சியாகவும் விளையாடியது வித்தியாச அனுபவமாக இருந்தது" என்றார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் இனியன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஃபொடோர்சக்கை வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவின் 61ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சதுரங்க இளவரசி’ ஹம்பியின் கதை