சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று (ஜூலை 17) நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்தவரும், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையுமான பி.வி. சிந்து, சீனாவைச் சேர்ந்தவரும், 11ஆம் நிலை வீராங்கனையுமான வாங்-ஷி-யி உடன் மோதினார்.
இப்போட்டியின் முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வென்று பிவி சிந்து முன்னிலை பெற்றார். இருப்பினும், அடுத்த செட்டை வாங்-ஷி-யி 21-11 என்ற கணக்கில் வென்று அசத்தி, ஆட்டத்தை சமன்படுத்தினார். இதனால், மூன்றாவது செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்தது.
ஒரு கட்டத்தில், பிவி சிந்து 17-14 என்ற முன்னிலை இருந்து வந்தாலும், வாங்-ஷியும் விடாமல் புள்ளிகளை பெற்றுவந்தார். அப்போது சுதாரித்த சிந்து, அடுத்தடுத்து விரைவாக புள்ளிகளை பெற்று, வாங்-ஷியை முன்னேற விடாமல் தடுத்தார். இதன்மூலம், மூன்றாவது செட்டை 21-14 என்ற கணக்கில் வென்று சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பிவி சிந்து, இந்தாண்டு சையது மோடி சர்வதேச தொடரையும், சுவிஸ் ஓபன் தொடரையும் வென்று இரண்டு சூப்பர் 300 தொடர்களை கைப்பற்றியிருந்தார். தற்போது, சூப்பர் 500 தொடரான சிங்கப்பூர் ஓபன் தொடரை வென்று தனது முதல் சூப்பர் 500 பட்டத்தை சிந்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல்... 2 நாள்கள் கூட தாங்காது...' - கதறும் இலங்கை கிரிக்கெட் வீரர்