ஃபார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் தலைசிறந்த ரேஸர்களில் ஒருவராகத் திகழ்கிறார். 32 வயதான இவர் ரெட் புல் அணிக்காக 2010 முதல் 2013 வரை தொடர்ந்து நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தினார்.
பின்னர் 2014இல் ரெட் புல் அணியுடனான இவரது ஒப்பந்தம் முடிவுக்குவந்தது. இதையடுத்து, தனது குழந்தை பருவ ஹீரோ மைக்கல் ஷூமேக்கரைப் போலவே தானும் ஃபெராரி அணிக்காக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுதர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் ஃபெராரி அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஆனால், ரெட் புல் அணிக்காக விளையாடி சாம்பியன்ஷிப் பெற்றுத்தந்ததை போல இவரால் ஃபெராரி அணிக்காக விளையாட முடியவில்லை. இந்நிலையில், நடப்பு 2019-20 சீசனுக்கான எஃப் 1 போட்டிகள் தற்போது கரோனா வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் ஃபெராரி அணியுடன் முடிவடையும் அவரது ஒப்பந்தம், மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடப்பு சீசனுடன் ஃபெராரி அணியை விட்டு விலகுவதாக செபாஸ்டியன் வெட்டல் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஃபெராரி அணியுடனான எனது உறவு 2020 உடன் முடிவடைகிறது. இது நானும் ஃபெராரி அணியும் சேர்ந்து எடுத்த முடிவாகும். இந்தக் கூட்டு முடிவில் நிதி பிரச்னை எந்தப் பங்கும் வகிக்கவில்லை" என்றார்.
ஃபெராரி நிர்வாக இயக்குனர் கெஸ்டியோன் ஸ்போர்டிவா மற்றும் குழு முதல்வர் மாட்டியா பினோட்டோ கூறுகையில், இது எளிதான முடிவல்ல என்றாலும், ஃபெராரி அணியும் செபாஸ்டியன் வெட்டலும் சேர்ந்த எடுத்த முடிவாகும். இதுதான் இரு தரப்புக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என கருதப்படுகிறது என்றனர். ஃபெராரி அணிக்காக இதுவரை 54 சுற்றுகளில் பங்கேற்ற செபாஸ்டியன் வெட்டல், 14 சுற்றுகளில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 26 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்.... எஃப் 1 ரேஸ் இழந்த வீரர்