ஹைதராபாத்: சச்சின் டெண்டுல்கர்... கிரிக்கெட் விளையாட்டுக்காகவே படைக்கப்பட்டவர் எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும். அவரது சாதனைகளை சொல்வது ஒரு பெருங்கடலைப் பாட்டிலுக்குள் அடைப்பதற்குச் சமம். இருந்தாலும், உலகக்கோப்பை கிரிக்கெட் உட்பட முக்கியத் தொடர்களில் அவரது சாதனைகளை பார்ப்போம்.
முதல் சதம்: வான்கடே மைதானத்தில் 1988-89ம் ஆண்டில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற 15 வயது சிறுவன் சச்சின் சதம் விளாசி அசத்தினார். இதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் படிக்கல்லாக அமைந்தது.
முதல் உலகக்கோப்பை: 1992ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான் சச்சின் பங்கேற்ற முதல் உலகக்கோப்பைத் தொடர். அப்போது அவருக்கு வயது 18. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 54 ரன்கள் விளாச, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸி.க்கு எதிராக 90: 1996 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 258 ரன்களைக் குவித்தது. இந்திய அணி 7 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மெக்ராத், ஷேன்வார்ன் பந்துகளை விளாசிய சச்சின் 84 பந்துகளில் 90 ரன்களை எடுத்தார். எனினும், அந்த ஆட்டத்தில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஆல்ரவுண்டராக அதிரடி: 1998ம் ஆண்டு சாம்பியன் டிராபியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 141 ரன்களை விளாசினார். பின்னர் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
கென்யாவை கதறவிட்டார்: 1999 உலகக்கோப்பை தொடரின் போது, தந்தை காலமானதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் விளையாடவில்லை. பின்னர், கென்யாவுடன் நடந்த ஆட்டத்தில் பங்கேற்ற அவர், 101 பந்துகளில் 140 ரன்களை விளாசினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 98: 2003 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 273 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் 75 பந்துகளில் 98 ரன்களைக் குவித்தார், டெண்டுல்கர். இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெளியில் பறந்த பந்து: 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆன்ட்ரூ கேடிக் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் சச்சின். மின்னல் வேகத்தில் சென்ற பந்து, மைதானத்தை விட்டு வெளியே பறந்தது.
முதல் இரட்டை சதம்: 2010ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் நடந்த ஒருநாள் போட்டியில், இரட்டைச் சதம் விளாசி கிரிக்கெட் உலகின் புருவத்தை உயர்த்த வைத்தார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில், இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இங்கிலாந்துடன் சதம்: 2011 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 115 பந்துகளில் 120 ரன்களை விளாசினார். இதனால், இந்திய அணி 338 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ரன்களை குவித்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
கனவு நனவான தருணம்: 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது சச்சினின் கனவாக இருந்தது. இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97, தோனி 91 ரன்களை விளாசி, உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தனர். இந்தத் தொடரில், 9 போட்டிகளில் பங்கேற்ற சச்சின் 482 ரன்களை குவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை விளாசியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். 50 வயதானாலும், ஒரு இளைஞனை போல் சுறுசுறுப்புடன் வலம் வரும் அவர், தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். அவரது ஆலோசனையும், வழிநடத்தலும் கிரிக்கெட்டுக்கு எப்போதும் தேவை என்றால் அது மிகையாகாது. பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின்!