கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளில் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நவம்பர் 27ஆம் தேதி ஹாமில்டனில் 2ஆவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஹாக்லி ஓவல் மைதானத்தில் இன்று (நவம்பர் 30) 3ஆவது ஒருநாள் போட்டி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் 47. 3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளுக்கு 51 ரன்களை எடுத்தார். அதேபோல ஷ்ரேயாஸ் ஐயர் 59 பந்துகளுக்கு 49 ரன்களையும், கேப்டன் ஷிகர் தவான் 45 பந்துகளுக்கு 28 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் நியூசிலாந்தின் மேட் ஹென்றி, டேரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அந்த வகையில், 220 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. முதலாவதாக களமிறங்கிய ஃபின் ஆலன் 54 பந்துகளுக்கு 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய டெவோன் கான்வே 51 பந்துகளுக்கு 38 ரன்களுடனும், 3ஆவதாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 3 பந்துகளையும் எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன்படி 18 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புகளு 104 ரன்களை நியூசிலாந்து எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடர்வதால் ஆட்டம் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
இதையும் படிங்க: துபாயில் குத்தாட்டம் போட்ட டோனி - வைரல் வீடியோ