அமெரிக்காவின் என்.பி.ஏ. எனப்படும் தேசிய கூடைப்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் கூடைப்பந்தாட்ட தொடர் மிகவும் பிரபலமான ஒன்றாகும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கூடைப்பந்தாட்ட தொடருக்கென்று உலக முழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இப்போட்டியைக் காணும் வழக்கம் ஒரு சில இளைஞர்களிடம் உள்ளது.
இந்தியாவில் கூடைப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் என்.பி.ஏ. தொடரின் சீசன் தொடங்குவதற்கு முன் நடத்தப்படும் ப்ரீ-சீசன் போட்டிகள் மும்பையில் நடத்தப்படும் என்று கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 4, 5 தேதிகளில் சாக்ரோமெண்டோ கிங்ஸ் மற்றும் இண்டியானா பேசர்ஸ் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது.
மும்பை டோம் என்.எஸ்.சி.ஐ. மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தொடரை நடத்தும் என்.பி.ஏ. மும்பையின் கடற்கரையில் மிதக்கும் கூடைப்பந்தாட்ட மைதானத்தை உருவாக்கியுள்ளது.
பாந்த்ரா வோர்லி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் விளையாட்டு வீரர்கள், என்.பி.ஏ. கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் ஜேசன் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது பேசிய வில்லியம்ஸ், நீங்கள் எதைச் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் கூடைப்பந்தாட்டத்தில் முன்னேறிவருவதாகக் கூறிய அவர், இந்திய சிறுவர்கள் அதில் சற்று பின்தங்கியிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் கூடைப்பந்தாட்டத்திலும் மேலே வரலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.