சென்னை: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-வது எடிஷன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான் என 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. ரவுண்ட் ராபின் மூலம், முதல் 4 இடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். போட்டியின் முதல் ஆட்டத்தை தென்கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தென்கொரியா - ஜப்பான்: முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா ஜப்பானை எதிர்கொண்டது. முதல் கோலை ஜப்பான் வீரரான ஊக்கா ரயோமா தனது அணிக்காக அடித்தார். அதன் பின் 25-வது நிமிடத்தில் தென்கொரியா வீரர் பார்க் சியோலியோன் முதல் கோல் அடித்து ஆரம்பித்து வைத்தார். 2வது பாதியில் தென்கொரியா ஆதிக்கம் செலுத்த அணியின் இரண்டாவது கோலை கிம் ஜுங்கு அடித்து முன்னிலை பெறச் செய்தார். ஆட்ட நேர முடிவில் தென்கொரியா 2-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
மலேசியா - பாகிஸ்தான்: இரண்டாவது லீக் ஆட்டமானது மாலை 6.15 மணிக்கு தொடங்கியது. இதில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய மலேசிய அணி 28-வது மற்றும் 29-வது நிமிடங்களில் அடுத்தடுத்து ஃப்ர்ஸான் அஷாரி கோல் அடுத்து மிரட்டினார். முதல் பாதியிலேயே மலேசிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மலேசியா அணி 44-வது நிமிடத்தில் கோலடித்தது. அதை ஷெல்லோ சில்வரியல் அடித்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. ஆட்ட நேர முடிவில் மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வென்றது.
இந்தியா - சீனா: மூன்றாவது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா அணி சீனாவுடன் மோதியது. இந்தியா அணி 5-வது நிமிடத்திலேயே கோல் அடித்து எண்ணிக்கையை தொடங்கியது. இதை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடித்தார். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் பெனால்டி ஷாட் மூலமாக அவரே மீண்டும் கோல் அடித்தார்.
இந்தியா அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, 3வது கோலை 15-வது நிமிடத்தில் சுக்ஜுத் சிங் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அகாஷ்தீப் சிங் கோல் அடித்தார். ஒரு வழியாக போராடி இந்தியா அணி 4 கோல் அடித்த பின்பு 18-வது நிமிடத்தில் வென்ஹுய் சீனா அணிக்காக முதல் அடித்து தொடங்கி வைத்தார். பின்பு 19-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் வருண் குமார் கோல் அடித்து எண்ணிக்கையை 5-ஆக உயர்த்தினார்.
இந்நிலையில், சீனா அணி வீரர் 25-வது நிமிடத்தில் காவ் ஜியெஷெங் கோல் அடிக்க சீனா 2-5 என்ற கணக்கில் வித்தியாசத்தை குறைத்தது. இந்திய அணி 5 கோல் அடித்த நிலையில், மீண்டும் 30-நிமிடத்தில் வருண் குமாரும், 40-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடிக்க 7 கோலாக அதிகரித்தது. இறுதியில் இந்தியா அணி 5 கோல் வித்தியாசத்தில் சீனாவை வென்று அசத்தியது.
இன்றைய ஆட்டங்களில் தென்கொரியா - பாகிஸ்தான் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடந்து சீனா - மலேசியா ஆட்டம் மாலை 6 மணிக்கும். அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு இந்தியா - ஜப்பான் அணிகள் சந்திக்கின்றன.