2016ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் தீபா மாலிக். எஃப் 53 குண்டு எறிதல் பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
குண்டு எறிதல் போட்டியில் இதுவரை தேசிய அளவில் 58 பதக்கங்களும், சர்வதேச அளவில் 23 பதக்கங்களும் வென்ற இவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்தாண்டு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கியது. இந்த விருதை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
ஏற்கனவே பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது வென்ற இவர், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் தலைவராக (பி.சி.ஐ) தேர்வு செய்யப்பட்டார். தேசிய விளையாட்டுக் கொள்கையின்படி, போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் எந்த கூட்டமைப்புகளிலும் நிர்வாகிகளாக பதவி வகிக்க முடியாது.
அதன் அடிப்படையில் தான் பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே ஓய்வு பெற்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "நான் இப்போதுதான் ஓய்வு பெற்றேன் என யார் சொன்னது. நான் பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே எனது ஓய்வு கடித்ததை கடந்த செப்டம்பரில் பாராலிம்பிக் கமிட்டியிடம் வழங்கிவிட்டேன்.
ஆனால் அப்போது நான் எனது முடிவை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அதன்பிறகு நான் பி.சி.ஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். அதில் வெற்றி பெற்று தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என பதவிட்டிருந்தார். பின் இந்த ட்வீட்டை அவர் அழித்துவிட்டார்.
இதையும் படிங்க: ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்ற சானியா மிர்சா...!