கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன.
அந்த வரிசையில் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்தான முடிவு இன்னும் நான்கு வாரத்திற்குள் எடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓசி) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஓசி தலைவர் தாமஸ் பாச் (Thomas Bach) கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விளையாட்டுத் துறையில் பல்வேறு வகையான பிரச்னைகள் உருவாகியுள்ளன. தற்போது பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்துவருகிறோம். மேலும் இது குறித்தான முடிவுகளை இன்னும் நான்கு வாரத்திற்குள் எடுக்க முடிவுசெய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் இந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது வைரசின் தாக்கத்தினால் வீரர்கள் அச்சமடைந்துவரும் சூழ்நிலையில், ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதை நினைத்து அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவிட்-19: சுயத் தனிமைப்படுத்திக் கொண்ட எஃப்.1 சாம்பியன்!