கத்தாரின் தோஹா நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 4*400 மீ தொடர் ஓட்டப்பந்தய போட்டியின் பிரதான சுற்றில் முகமது அனாஸ், வி.கே. விஸ்மாயா, ஜிஸ்னா மேத்யூவ், நிர்மல் நோவா டாம் ஆகியோர் அடங்கிய இந்திய கலப்பு அணி, இலக்கை 3 நிமிடம் 16 நொடி, 14 மணித்துளிகளில் (3:16.14) கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
![Doha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598703_abn.jpg)
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 4*400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தின் கலப்பு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் அமெரிக்க அணி இலக்கை மூன்று நிமிடம் ஒன்பது வினாடி 34 மணித்துளிகளில் (3:09:34 )கடந்து புதிய உலக சாதனைப் படைத்தது மட்டுமின்றி தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது. அவர்களைத் தொடர்ந்து ஜமைக்கா அணி மூன்று நிமிடம் 11 வினாடி 78 மணித்துளிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், பஹ்ரைன் அணி மூன்று நிமிடம் 11 வினாடி 84 மணித்துளிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
![Doha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598703_a.jpg)
மிகவும் எதிர்பார்த்த இந்திய அணி இலக்கை மூன்று நிமிடம் 15 வினாடி 77 மணித்துளிகளில் கடந்து ஏழாவது இடத்தை மட்டுமே பிடித்தது. இந்திய அணியில் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை என்பதை நினைவுக்கூற வேண்டியது அவசியம். முன்னதாக, இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதால், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.