அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக, முன்னாள் கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் சஞ்சய் கபூர் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குபின் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் கபூர், இந்தியாவில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க ‘இந்தியன் செஸ் லீக்’ தொடரை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய சஞ்சய் கபூர், ”இந்தியா உலகத்திற்கான செஸ் விளையாட்டு அரங்கமாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த இலக்கை அடைய விரிவான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். இந்தியாவில் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக சர்வதேச வீரர்களுடன் செஸ் லீக் ஒன்றை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அதன்படி இந்த லீக்கிற்கான முதல் சீசனை இந்தாண்டு இறுதிக்குள் நடத்த ஆலோசித்து வருகிறோம்.
அது மட்டுமல்லாமல், பள்ளி மட்டத்தில் சதுரங்கத்தை பிரபலப்படுத்த பள்ளிகளில் ஏ.ஐ.சி.எஃப்-செஸ் திட்டத்தையும் தொடங்க உள்ளோம். இந்தியாவிலுள்ள 33 மாநில செஸ் கூட்டமைப்புகளும் இத்திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்துவார்கள். இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தையும் செஸ் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது சிறந்த எதிர்கால சந்ததியினரை வளர்க்க உதவும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹர்பஜன் சாதனையை முறியடித்த அஸ்வின்!