கத்தாரின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகளப் தொடரின் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், இன்று தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது பெங்களூருவில் வருமானவரித் துறையில் வேலை செய்துவருகிறேன். தமிழ்நாட்டிலேயே வேலை செய்து தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு தொடர்ந்து உதவி செய்தால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.