உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கியது. இந்தத் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் மகளிர் 100 மீ பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜமைக்க வீராங்கனை ஷெல்லி அன் ஃபிரேஷர் பிரைஸ், 10.71 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்த இடங்களைப் பிடித்த பிரிட்டன் வீராங்கனை ஆஷர் ஸ்மித் (10.83 விநாடி) வெள்ளியும் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த மேரி ஜோசி டா லூ (10.90 விநாடி) வெண்கலமும் வென்றனர்.
2017ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய ஃபிரேஷர் பிரைஸ் 100 மீ பிரிவில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். முன்னதாக அவர் 2009, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றிருந்தார். எனவே உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் பெற்ற நான்காம் தங்கம் இதுவாகும்.
அவர் முன்பு பெற்ற தங்கத்தைவிட நான்காவதாக தாய்மையடைந்த பின் பெற்ற இந்தத் தங்கம்தான் என்றைக்கும் அவருக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும். ஃபிரேஷர் பிரைஸ் 2008, 2012 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.