ஹைதராபாத்: நார்வே நாட்டின் கால்பந்து மேலாளரான ஓலே குன்னர் சோல்ஸ்கேர் முதல் முறையாக இம்மாதம் 15 முதல் 17 வரையிலான தேதிகளில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த சுற்றுப்பயணமானது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை ஏஸ் ஆஃப் பப்ஸின் நிறுவனரும், மான்சஸ்டர் யுனைடெட் ரசிகருமான திலக் கெளரங் ஷா நடத்துகிறார். பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணமானது நடைபெறுகிறது.
இது குறித்து ஓலே குன்னர் கூறுகையில், "கால்பந்து மீதான ஆர்வத்தையும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர் கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், அந்த சுற்றுப்பயணமானது தற்போது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைத்துள்ளேன். இருப்பினும் வரும் பிப்ரவரி மாதம் நான் இந்தியாவுக்குச் செல்லும் போது ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன்" என்றார்.
இது குறித்து, திலக் கெளரங் ஷா கூறுகையில், "ஓலேவின் இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு எதிர்பாராதது. இது தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இது குறித்து அவரிடம் நான் பேசினேன். மேலும், இந்த சுற்றுப்பயணத்தை நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
ஓலே குன்னர் சோல்ஸ்கேர் மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் வீரர் ஆவார். இவர் அந்த கிளப்பிற்காக 366 போட்டிகளில் 126 கோல்களை அடித்துள்ளார். மேலும், இவர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச் அணிக்கு எதிராகக் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகக் கோப்பையில் இந்தியா ஆடிய 5 ஆடுகளங்கள் சுமார் தான்... ஐசிசி கூறுவது என்ன?