இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரும், இருமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான சுஷில் குமார், பள்ளி விளையாட்டு சம்மேளனத்தின் தலைவராகவும் பதவி வகித்துவருகிறார்.
இந்நிலையில் பள்ளி விளையாட்டு சம்மேளனத்தில் செயலாளர், அனுமதியின்றி தனது கையொப்பத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக சுஷில் குமார் நேற்று காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுஷில் குமார் கூறுகையில், "நவம்பர் 12 ஆம் தேதி எஸ்.ஜி.எஃப்.ஐ.யில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அரசின் கடிதத்திற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று துறை செயலாளரிடம் கேட்டதற்கு அவர் எதையும் கூறவில்லை.
அதன்பின் தான், அனுமதியின்றி எனது கையொப்பம் இருந்ததை நான் கவனித்தேன். இதுகுறித்து நான் மத்திய அரசுக்கும், எஸ்.ஜி.எஃப்.ஐ செயலாளருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால் அக்கடிதத்திற்கும் செயலாளர் எந்தவித பதிலையும் தரவில்லை.
பின்னர் எனது கையொப்பத்தை வைத்து மோசடி நடந்திருப்பதை அறிந்து நான் விளையாட்டுதுறை அமைச்சரை நேரில் சந்தித்து, நடந்தவற்றை எடுத்துரைத்தேன். அதன்பின் அவர் எஸ்.ஜி.எஃப்.ஐ மீதுள்ள அனைத்து முறைகேடுகளையும் நீக்கிய பின் டிசம்பர் மாதத்திற்குள் புதிய அலுவலர்களுக்கான தேர்தலை நடத்துமாறு கூறினார்.
தற்போது நான் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420, 468, 471 மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் எஸ்.ஜி.எஃப்.ஐ. செயலாளருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளேன். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நிதான ஆட்டம்