சென்னை: ஒலிம்பிக்கிற்கு வாள்வீச்சில் தகுதிபெற்ற முதல் இந்தியரான பவானி தேவி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாள்வீச்சில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆரம்பத்தில் நிறைய போராட்டங்கள் எதிர்கொண்டேன். ஆனால், எனது குடும்பத்தின் உதவியுடன் அவர்களை வென்றேன். இது பவானியின் வெற்றியில்லை, இது முழுச் சமூகத்திற்குமான வெற்றியாகும்.
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்ட அனைவரும் தற்போது வாள்வீச்சை ஆதரிக்கின்றனர். முன்னுரிமை விளையாட்டுகளில் வாள்வீச்சும் சேர்க்கப்பட்டுள்ளது. இனிமேல் அதிகமான மக்கள் வாள்வீச்சை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
விளையாட்டு ஆண்களுக்கானதாக இன்றும் கருதப்படுகிறது. பி.வி. சிந்து, சாய்னா நேவால் பி.டி. உஷா ஆகியோரின் சாதனைகளுக்குப் பிறகு நிலைமை மாறிவருகிறது, ஆனால் இன்னும், அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன" என்று அவர் கூறினார்.
மேலும், "தமிழ்நாட்டில், ஒலிம்பிக்கிற்குத் தயாராவதற்கான உதவித்தொகைத் திட்டம் ஒன்று உள்ளது. 2016ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். விளையாட்டுகளில் பெண்களை வளர்ப்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது" என்றார்.