இந்தியாவில் விஜேந்தர் சிங்கிற்கு அடுத்தாக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படக்கூடிய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன். 69 கிலோ எடைப்பிரிவில் இவர் 2018இல் நடைபெற்ற ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜப்பானின் செவான் ஒகாஸ்வாவை வீழ்த்தி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார். விஜேந்தர் சிங்கையடுத்து ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மூன்று முறை தகுதிபெற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
இவரைப் போன்ற குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவிலிருந்து மொத்தம் ஒன்பது வீரர், வீராங்கனைகள் தகுதிப்பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன்முறையாக அடுத்தாண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவரும் இந்தியக் குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தயாராவது குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு காணொலி அழைப்பு வாயிலாகச் சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அப்போது நாம் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...
கேள்வி: ஊரடங்கு அமலில் உள்ளதால் உங்களால் சரிவர பயிற்சி மேற்கொள்ள முடிகிறதா?
பதில்: பயிற்சி மேற்கொள்ள போதுமான உபகரணங்கள் வீட்டில் இல்லாத சூழலால் தற்போது என்னால் சரியாகப் பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை.
கேள்வி: ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்ட முடிவு பற்றி உங்களது கருத்து?
பதில்: மற்ற வீரர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு இந்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுவதற்கு எனக்கு அதிகமான நேரம் தற்போது கிடைத்துள்ளது.
கேள்வி: கரோனா தீநுண்மியால் அடுத்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும் என நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: இல்லவே இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால் ஒரு குத்துச்சண்டை வீரராக எனது பயணம் பாதிக்கப்படும்.
கேள்வி: 2018 ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளீர்கள். உங்களது அடுத்த இலக்கு?
பதில்: எனது அடுத்த இலக்கே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான்.
இதுவரை ஒன்பது குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர். இதனால், நிச்சயம் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறி விகாஸ் கிருஷ்ணன் தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் முன்னோடிகள்!