கரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அடுத்த மாதம் 14 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டிலேயே அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸ் பெருந்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும். இந்த வைரஸ் தாக்காமல் இருக்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அதேசமயம், இந்த வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவலை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
இந்த நிலையில், நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க போதுமான இடங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துவருகிறது.
இந்நிலையில், டெல்லியில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் இடமாக, நேரு உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தி கொள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு கழகம், அம்மாநில அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு பயிற்சி கூடமும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் பெட்டியில் கரோனா சிகிச்சை வார்டா?.. பலே பலே!