அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நேற்றைய போட்டியின் மகளிர் பிரிவில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தலிலா முஹம்மது, 52.20 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக இந்த பிரிவில் கடந்த 2003ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை யுலியா பெச்சோன்கினா 52.34 விநாடிகளில் ஓடியதே உலக சாதனையாக இருந்தது. 16 வருடங்கள் முறியடிக்கப்படாமல் இருந்த இச்சாதனையை 29 வயதான தலிலா தற்போது முறியடித்துள்ளார்.
இப்போட்டியில் சிட்னி மெக்லாஃப்லின் (52.88), ஆஷ்லி ஸ்பென்சர் (53.11) முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். இவர்கள் மூவரும் செப்டம்பர் மாதம் தோஹாவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
தலிலா, 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இதே 400 மீட்டர் பிரிவில் நடைபெற்ற தடை தாண்டுதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.