கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கூட்டமைப்பைச் சார்ந்த பணியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, டோக்கியோ ஒலிம்பிக் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர் வீட்டுப்பாதுகாப்பில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக வேலை செய்துவந்த 3,500 பேர் கடந்த சில வாரங்களாகவே வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாகவும், அவர்களில் 90 விழுக்காட்டினருக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை மேற்கொண்டு, சோதனை முடிவுகள் வைரஸ் தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வேலை செய்து வந்த கட்டடம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் வேலை செய்து வந்தவர்களை சில நாட்களுக்குத் தங்களது, வீடுகளிலேயே இருக்கும்படியும் டோக்கியோ ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் கூட்டமைப்பில் பணிபுரிந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:இங்கிலாந்தில் ஆண்டர்சன்னை எதிர்கொள்வது கடினம் - அஜிங்கியா ரஹானே!