சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி கடந்த 15ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் இந்த போட்டி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக கிராண்ட் மாஸ்டர்கள் 8 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
நேற்றுடன் 4 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (டிச.19) 5வது போட்டி நடைபெற்றது. இதில் ஹங்கேரி நட்டின் கிராண்ட் மாஸ்டரான சனான் சுகிரோவ்வை இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் 40வது நகர்விலும், அலெக்சாண்டர் ப்ரெட்கேவை - பாவெல் எல்ஜனோ 56வது நகர்விலும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஹரிகிருஷ்ணா - பர்ஹாம் மக்சூட்லூ இடையேயான போட்டியும், அர்ஜுன் எரிகைசி - லெவோன் அரோனியன் இடையேயான போட்டியும் முறையே 51வது, 55வது நகர்வில் டிராவானது. இதையடுத்து 5வது சுற்று முடிவில், குகேஷ் 3.5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஹரிகிருஷ்ணா மற்றும் பாவெல் எல்ஜனோ ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.
தொடர்ந்து லெவோன் அரோனியன், பர்ஹாம் மக்சூட்லூ, அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல் சனான் சுகிரோவ், 2 புள்ளிகள் கொண்டு 7-ஆவது இடத்திலும், அலெக்சாண்டர் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.
இவர்கள் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் கேண்டிடேஸ் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பாக அமையும். மேலும், இந்த போட்டிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 15 லட்ச ரூபாயும், 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், 3வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.
அதே போல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே 5 லட்சம் ரூபாயும், 4 லட்சம் ரூபாயும், 3.5 லட்ச ரூபாயும், 2.5 லட்ச ரூபாயும், 2 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ஸ்டார்க்.. எவ்வளவு தெரியுமா?