இந்தியாவின் செஸ் விளையாட்டின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் வென்றவர். இவர் இளைஞர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து பயிற்சியளிப்பதற்காக வெஸ்ட்பிரிட்ஜ் அமைப்புடன் இணைந்து செஸ் அகாடமியை தொடங்கியுள்ளார்.
'வெஸ்ட் பிரிட்ஜ் - ஆனந்த் செஸ் அகாடமி' என பெயரிடப்பட்டுள்ள இந்த அகடாமியில் இந்தியாவின் தலைசிறந்த ஐந்து செஸ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உதவித் தொகை பெறும் ஆர்.பிரக்னானந்தா (15), நிஹால் சரின்(16), ரவுனக் சாத்வானி (15), டி குகேஷ் (14), பிரக்னானந்தாவின் சகோதரி ஆர்.வைஷாலி(19) ஆகியோருக்கு முதற்கட்டமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தகுதியான வீரர்,வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இந்த அகாடமியில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளில் செஸ் விளையாட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் பல வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் அவர்கள், சர்வதேச செஸ் விளையாட்டு தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறுவதற்கும், உலக சாம்பியன்களாக மாறவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
தற்போது கரோனா தொற்று பரவும் சூழல் உள்ளதால், தகுதியான வீரர்களுக்கு காணொலி கூட்டரங்கு மூலம் பயிற்சியளிக்க உள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சென்னை சிட்டி எஃப்சி அணியின் புதிய பயிற்யாளராக சத்தியசாகரா நியமனம்!