சிறிய வயதில் 3 மணி நேரம் 31 நிமிடங்களில் 2222 அம்புகள் எய்து உலக அளவில் சாதனை செய்துள்ளார் 5 வயதே ஆன ரிஷிதேவ். இவரது சாதனை ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஜாலியான விளையாடிக் கொண்டிருக்கும் ரிஷிதேவின் கைகளில் வில் - அம்பைக் கொடுத்தால், சரியாக குறிவைத்து அம்புகளை எய்து அனைவரையும் அசர வைக்கிறார்.
3 வயதின் போதே ரிஷிதேவை முதலில் கைப்பந்து, குத்துச்சண்டை என ஒருசில விளையாட்டுகளில் பயிற்சிக்கு அனுப்பியுள்ளார்கள் அவரது பெற்றோர்கள் ஜெயக்குமாரும், ஸ்ரீலேகாவும். ஆனால் ரிஷிக்கு அதில் ஆர்வமில்லாததால், செல்ல மறுத்துள்ளார். பின்னர் தான் வில்வித்தை பயிற்சியை விளையாட்டாக மேற்கொண்டுள்ளனர். அதில் நாளடைவில் ஆர்வம் அதிகரிக்க, வில்வித்தை பயிற்சி அகாடமியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிஷிதேவ் வில்வித்தை பயிற்சி அகாடமியில் சேர்த்துள்ளனர். முதலில் 12 வகுப்பு வரை அடிப்படை வில்வித்தை கற்றுக்கொடுப்ப்படும். அதனை ரிஷிதேவ் 8 வகுப்பிலேயே கற்றுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் 2019ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த ஐந்து வயதிற்குட்பட்டோருக்கான வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ரிஷிதேவும் வில்வித்தை பயிற்சியில் தீவிரம் காட்டியுள்ளார். இந்தக் காலத்தில் ரிஷிதேவின் அம்பு எய்யும் வேகம் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட ஒரு நிமிடத்தில் 6 அம்புகளை எய்துள்ளார். இதனைக் கண்ட அவரின் பயிற்சியாளர், அம்பு எய்யும் வேகத்தை அதிகரித்து அதை ஒரு சாதனையாக செய்யலாம் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து ரிஷிதேவின் அம்பு எய்யும் வேகத்தை அதிகரிக்கப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மணி நேரத்தில் ஆயிரத்து 800 அம்புகளை எய்து சாதனை படைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ரிஷிதேவின் ஈடுபாட்டால் 6 மணி நேரத்தில் 2020 அம்புகளை எய்துவிடலாம் என தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து கொடுக்கப்பட்ட அந்தப் பயிற்சியின்போது 4 மணி நேரத்திலேயே 2222 அம்புகளை ரிஷிதேவ் எய்துள்ளார். இதையே சாதனையாக செய்யலாம் என ஏப்ரல் 14 தேதி அவருக்கு பயிற்சியைத் தொடங்கினோம். ஆனால் கரோனா காரணமாக அன்று நடத்த முடியவில்லை.
ஊரடங்கில் தளர்வு வந்தபிறகு பயிற்சியாளரே நேரில் சென்று ரிஷிதேவுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். இதனால் ஊரடங்கின்போது ரிஷிதேவ் ஆற்றல் திறன் அதிகரித்துள்ளது. இதன்வெளிப்பாடாக 3.31 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 222 அம்புகளை எய்து சாதனை புரிந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சாதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 3.31 மணி நேரத்தில் 2222 அம்புகளை எய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் சாதனை படைத்து, ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்தியா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார் ரிஷிதேவ்.
ஆனால் இந்த சாதனையை செய்ய ஸ்பான்சர்களும் யாரும் முன்வரவில்லை. ரிஷிதேவ் தந்தை மற்றும் பயிற்சியாளர் மணிவாசகம் கடன் பெற்றே இந்த சாதனை நிகழ்வை நடத்தியுள்ளனர்.
பள்ளி பருவத்தில் முதலே மாணவர்களை வில்வித்தை பயிற்சில் ஈடுபடுத்தினால் எளிதில் ஓலிம்பிக் வெற்றி பெறவைக்கலாம். அடுத்த சாதனையாக கண்களை முடி அம்பு எய்வதற்கு ரிஷிதேவ் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். அடுத்த சாதனைக்கு ஸ்பான்சர் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றார் பயிற்சியாளர் மணிவாசகம்.
"ஒரு முறை தோற்றுவிட்டால் அதைநினைத்து வருத்தப்படாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்" என்ற வசனத்தை ஊக்கமாக வைத்துள்ளார் ரிஷிதேவ்.
எதிர்காலத்தில் வில்வித்தையில் இந்தியாவின் பெயரை தலைநிமிரச் செய்ய போகும் ரிஷிதேவிற்கு வாழ்த்துகள்...!
இதையும் படிங்க: இந்திய அணிக்காக ஆட வேண்டும்... ஆனால், பயிற்சி செய்ய மைதானம் இல்லை...!