ஜெர்மனிக்காக ஹாக்கி விளையாடு உனக்கு எங்கள் நாட்டில் ராணுவத்தில் உயரிய பதவியை தருகிறேன் என 1936இல் ஹிட்லர், ஹாக்கியின் பிதாமகனுக்கு சலுகை தருகிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவுக்காக ஹாக்கியில் பல பெருமைகளை தேடித் தந்த அந்த பிதாமகனுக்கு நாம் உரிய மரியாதையும் அங்கீகாரமும் தரவில்லை.
அவருக்கு சிலை வைப்பதிலும், அவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடினால் மட்டும் அவருக்கான மரியாதை தந்துவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது. இந்தியா மட்டுமல்ல உலக ஹாக்கியின் பிதாமகனான தயான் சந்த்தின் இறுதி காலத்தை குறித்துதான் பார்க்க போகிறோம்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் ஹாட்ரிக் தங்கப் பதக்கம் வென்று தந்தவர் லெஜெண்ட்டும் மேஜருமான தயான் சந்த். சரியாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஒராண்டுக்குப் பிறகு இவரும் ஹாக்கியில் இருந்து சுதந்திரம் பெறுகிறார்.
இந்தியாவுக்காக பல பெருமைகளை தேடித் தந்த இவருக்கு மத்திய அரசு சார்பில் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அப்போதைய ஹாக்கி வீரர்களும், ரசிகர்களும் நினைத்தனர். ஆனால், மத்திய அரசோ 1956இல் பத்ம பூஷன் விருதை மட்டுமே தந்தது.
ஆனால், எந்த அடிப்படையில் மத்திய அரசு 2013இல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது தந்தது என்று இன்று வரையிலும் தெரியவில்லை. சரி இதுவும் பாராயில்லை. ஆனால், அவர் ஓய்வு பெற்றக் காலத்தில் மத்திய அரசு அவரை கண்டுக்கொள்ளாததுதான் மிகவும் வருத்தமளிக்கிறது.
ஏனெனில், 1970 காலக்கட்டங்களில், உத்தர பிரதேசத்தில் ஜான்சி நகரில் நடைபெற்ற விழாவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தயான் சந்தை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். ஆனால், அவரை அழைத்து வர வாகனத்தை அனுப்பவில்லை. இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது நண்பருடன் சைக்கிளில் அவ்விழாவிற்கு சென்றார்.
அவர் சைக்கிளில் வருவதை பார்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், குற்ற உணர்ச்சியுடன் இருந்தனர். பின், தயான் சந்த் அவர்களிடம் சைக்கிளில் வந்த நான் சைக்கிளிலேயே திரும்ப செல்கிறேன் என்றார். இது அவரது எளிமைத் தனத்தை காட்டினாலும், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அலட்சியத்தைதான் காட்டுகிறது.
இதையெல்லாம் விட மிகவும் கொடுமையானது, தயான் சந்த் நூரையிரல் புற்றுநோயால் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுக் கூட மத்திய அரசு எந்த விதத்திலும் அவருக்கு நிதியுதவி செய்யவில்லை. அவரோ தனக்கு கிடைத்த 200 ரூபாய் பென்ஷன் பணத்தில்தான் தன்னை பார்த்துக் கொண்டார்.
ஆனால், அவரை யாரும் பெரிதாக அங்கு கண்டுகொள்ளவில்லை. இதனால், அவர் ஜென்ரல் வார்ட்டில் சேர்க்கப்பட்டு, 12 நாட்கள் கழித்து 1979 டிசம்பர் 3இல் காலமானார். பாரத ரத்னா விருது அவருக்கு தர வேண்டும் என்று தொடர்ந்து பல குரல்கள் எழுந்தாலும், அது மத்தியில் ஆட்சி செய்த, செய்துவரும் அரசின் செவிக்கு கேட்கவில்லை.
2011இல் அப்போதையே பிரதமர் மன்மோகன் சிங், பாரத ரத்னா விருதுக்காக தயான் சந்தின் பெயரை பரிந்துரைக்க சில பல காரணங்களால் அவருக்கு அந்த ஆண்டு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. இது தயான் சந்த்தை அல்ல இந்தியாவுக்காக போராடிய லெஜெண்ட்டை அசிங்கப்படுத்திய செயலாகும்.
எனது தந்தைக்காக நான் பாரத ரத்னா விருதை கேட்கபோவதில்லை. விருது என்பது தகுதியின் அடிப்படையில் தர வேண்டுமே தவிர அதற்காக பிச்சை எடுக்கக் கூடாது. எனது தந்தை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவரா என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என அவரது மகன் அசோக் குமார் தெரிவித்துள்ளார். (அவரும் ஹாக்கி வீரர்)
தயான் சந்த் உயிரிழப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவர் கூறிய வார்த்தைகள் இவை: When I die, the world will cry, but India’s people will not shed a tear for me, I know them,” நான் உயிரிழந்தால், எனக்காக உலகமே கண்ணீர் சிந்தும் ஆனால், இந்திய மக்கள் யாரும் எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த மாட்டார்கள் என்றார்.
அதுமட்டுமின்றி, மருத்துவரிடம் அவர் இறுதி தருணத்தில் சொன்னதே ஒன்றே ஒன்றுதான், இந்தியாவில் ஹாக்கி இறந்து கொண்டிருக்கிறது. அவர் எப்படி அப்படி கணித்தார் என்று தெரியவில்லை, ஏனெனில் இந்தியா கடைசியாக 1980இல்தான் தங்கப்பதக்கம் வென்றது.
அதுவரை தங்கத்தில் ஜொலித்த இந்தியா அதன்பின் 39 ஆண்டுகள் ஆனாலும், வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்ற முடியாமல் போனது. ஒருவர் உயிருடன் இருக்கும்போது, அவர் வாழ்வின் இறுதியில் கஷ்டப்பட்ட போதும் அவருக்கு உரிய மரியாதை செலுத்தாதபோது, அவரது பிறந்தாளை தேசிய விளையாட்டு நாளாகவும், அவருக்கு சிலை வைப்பது மட்டும் சரியானதா என்றால் தெரியாது. வாழும் போது ஒருவருக்கு மரியாதை தாருங்கள், அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே அனுதாபம் கிடையாது. இனி மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், தயான் சந்த் போன்ற மற்றொரு ஜாம்பவான்களுக்கும் இந்த நிலைமை இனி நேரிட வேண்டாம்.