டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி தங்களது திறமைக்கான உறுதியைக் காட்டியுள்ளது. இந்த வரலாற்று வெற்றி ஹாக்கியில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும். இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க இது ஊக்குவிக்கும்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
ஜெர்மனிக்கு எதிராக நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஒட்டுமொத்த தேசமும் சாதனைக்காக பெருமை கொள்கிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த பெருமை மற்றும் மகிழ்ச்சி தருணம். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்! இது ஒரு பெரிய தருணம். உங்கள் சாதனைக்காக நாடு பெருமைப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்!
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி கடந்த 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு 41 ஆண்டுகளாக பதக்கம் வெல்ல முடியாமல் இருந்தது வேதனையை தந்தது. இன்றைய வெற்றியின் மூலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழ்நாடு பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்!