இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான், மந்திரவாதி, ஹாக்கி விளையாட்டின் முன்னோடி என்ற பெருமைக்குரியவர் மேஜர் தயான் சந்த். இந்திய ஹாக்கி அணிக்காக 400 கோல்களை அடித்துள்ள தயான் சந்த், தனது அற்புதமான ஆட்டத்தால் தொடர்ச்சியாக மூன்று முறை இந்தியாவிற்காக ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களையும் வென்றெடுத்து சாதனைப்படைத்தார்.
தயான் சந்தின் பிறந்தநாளை நினவுகூரும் வகையிலும், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 2012ஆம் ஆண்டு முதல் ஆக.29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த தினத்தில் விளையாட்டில் சாதிக்கும் வீரர்களுக்கு அர்ஜுனா, ராஜிவ்காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான்சந்த் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
தயான் சந்த் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள்
மல்யுத்தம் மீது ஆர்வம்:
1905ஆம் ஆண்டு அலகாபாத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சமேஷ்வர் சிங்- சாரதா சிங் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் தயான் சந்த். இவரது குடும்பம் அடிக்கடி ஒரு நகரத்தை விட்டு இன்னொரு நகரத்திற்குச் செல்லவேண்டி இருந்ததால், தயான் சந்த் ஆறாவது வரை மட்டுமே படிக்க முடிந்தது. தனது பள்ளிப் பருத்தின்போது தயான் சந்த் மல்யுத்த போட்டியில் மட்டுமே மிகுந்த ஆர்வத்தை கொண்டவராக இருந்தார். பிற விளையாட்டுகளில் அவரது ஆர்வமானது தென்படவில்லை.
16 வயதில் ராணுவம்:
தயான் சந்தின் தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தால், தயான் சந்தும் தனது 16 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து சிப்பாயாகப் பணிபுரிந்தார். அங்குதான் தயான் சந்த் ஹாக்கி விளையாட்டில் தனது திறனை வெளிப்படுத்த தொடங்கினார். மேலும் ஹாக்கி விளையாட்டில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சந்த், இரவு நேரங்களில் ஹாக்கி பயிற்சியையும், பகலில் சிப்பாயாகவும் செயல்பட்டுவந்தார். இதன் காரணமாகவே இவருக்கு ‘சந்த்’ என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. ஹிந்தியில் சந்த் என்பதன் அர்த்தம் சந்திரன் என்பதாகும்.
ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி:
தயான் சந்த் ஒருமுறை விளையாட்டின்போது அவரது கோல் தவறியது. உடனடியாகப் போட்டி நடுவரிடம் சென்று இந்த கோல் போஸ்ட்டுகளின் அளவீடு தவறாக உள்ளதென முறையிட்டார். அதனைப் பரிசீலித்த போட்டி நடுவர் கோல் போஸ்ட்டுகளின் அளவைச் சரிபார்த்தபோது, அது சர்வதேச விதிகளின்படி பரிந்துரைக்கப்பட்ட ஆதிகாரப்பூர்வ அளவைவிட குறைந்ததாக காணப்பட்டது. இதன்மூலம் தயான் சந்த் ஹாக்கி விளையாட்டின் மீது கொண்டிருந்த அளப்பரிய ஆர்வத்தைக் கண்டவர்கள் சந்தை ‘ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி’ என்றழைத்தனர்.
1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்:
1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய ஹாக்கி அணியில் தயான் சந்த் நேரடியாக இடம்பிடித்தார். ஆனால் மீதமுள்ள வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்காக மாகாணங்களுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டின் முதல் சுற்றிலேயே தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப்படைத்தது.
தயான் சந்த்-அடோல்ஃப் ஹிட்லர்:
1936ஆம் ஆண்டு நடைபெற்ற பேர்லின் ஒலிம்பிக் இறுதிப் போட்டியின்போது இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி எளிதாக வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் தயான் சந்த் மூன்று கோல்களை அடித்து அசத்தினார். சந்தின் திறமையான ஆட்டத்தைக் கண்ட ஹிட்லர், தயான் சந்திற்கு ஜெர்மன் குடியுரிமையையும், ஜெர்மன் ராணுவத்தின் கர்னல் பதவியையும் வழங்க தயாராக இருந்தார். இருப்பினும் தயான் சந்த் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிகழ்வு அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளடக்கிய பல நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 37 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தின் முடிவில் இந்திய அணி 34 போட்டிகளில் வெற்றியை ஈட்டியிருந்தது. மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் தயான் சந்த் 133 கோல்களை அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சச்சினின் சாதனையை கோலி அசால்ட்டாக முறியடிப்பார்: இர்ஃபான் பதான்!