பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பெல்ஜியம், ஸ்பெயின் இரண்டு அணிகளையும் எதிர்த்து விளையாடி வருகிறது. இதில், பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, உலகின் எட்டாம் நிலை ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணியின் அட்டாக்கிங் முறை ஆட்டத்தை ஸ்பெயின் டிஃபெண்டர்களால் தடுக்க முடியாமல் போனது.
இதனால், அடுத்தடுத்த இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 24ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் மன்ப்ரீத் சிங் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான ஹர்மன்ப்ரீத் சிங் 28ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஸ்பெயின் அணி 29ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. ஆனால், அதன்பின்னர், ஆட்டத்தில் மீண்டும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். அதன் பலனாக, 32ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் தனது இரண்டாவது கோலை அடித்தார். அவரைத் தொடர்ந்து, இந்திய வீரர்களான நீலகண்ட ஷர்மா 39ஆவது நிமிடத்திலும், மந்தீப் சிங் 56ஆவது நிமிடத்திலும், ரூபிந்தர் பால் சிங் 60ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர்.
இறுதியில், இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தத் தொடரில் அசத்தலான இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது. இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் மீண்டும் இந்திய அணி, ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில், வெற்றிபெற்று இந்திய அணி இந்தத் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.