டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனி அணியை 5-4 என்ற கோல் கணக்கில் இன்று (ஆக.5) வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
இதன் மூலம், ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தனராஜ் பிள்ளை செய்தியாளர்களிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், இந்திய ஹாக்கி அணியின் செயல்திறன் பற்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.
ஒலிம்பிக் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அதிக மன அழுத்தம் இருந்தது. அதைத் தாண்டி வீரர்கள் வெண்கலப் பதக்கத்திற்காக வலிமையான ஜெர்மனி அணியை எதிர்கொண்டு வீழ்த்தினர்.
இந்த வெற்றியானது புவனேஸ்வரில் 2023 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை, பாரிஸில் 2024 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல உற்சாகமூட்டும். மேலும் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் முடியும்.
இந்திய ஹாக்கிக்கு இன்று ஒரு பொன்னான நாள். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்தத் தருணத்தை அடைய இந்திய அணிக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.
ஜெர்மனி அணியுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பது எளிதல்ல. ஆனால் இந்திய வீரர்கள் அதை வெற்றிகரமாக செய்தனர். இந்த வெற்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தும்... துரத்தும் சாதிய வன்மம்