இந்திய ஹாக்கி அணி பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பெல்ஜியம், ஸ்பெயின் இரண்டு அணிகளை எதிர்த்து விளையாடிவருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில், உலக சாம்பியனும் ஐரோப்பா சாம்பியனுமான பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
இதையடுத்து, ஸ்பெயின் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கிலும் மீண்டும் ஸ்பெயின் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆண்ட்வெர்ப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின், 10ஆவது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை லாவகமாகப் பயன்படுத்திகொண்ட இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக மாற்றினார்.
அதன்பின், பெல்ஜியம் அணி கவுன்ட்டர் அட்டாக் ஆட்டத்திலேயே ஈடுபட்டுவந்தது. குறிப்பாக 25ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கார்னரை இந்திய அணியின் கோல்கீப்பர் பதக் அபாரமாக தடுத்துநிறுத்தியதால், முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி தொடங்கியவுடனே பெல்ஜியம் வீரர் ஃபெலிக்ஸ் கோல் அடித்து அசத்தியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. இதையடுத்து, இரு அணி வீரர்களும் பந்தை அதிகம் பாஸ் செய்தே விளையாடின. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் பெல்ஜியம் அணிக்கு வழங்கப்பட்ட இரண்டு பெனால்டி கார்னர்களையும் மீண்டும் இந்திய அணியின் கோல்கீப்பர் பதக் அசால்ட்டாக தடுத்தார்.
இந்த நிலையில், கோலடிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த இந்திய அணி, 52ஆவது நிமிடத்தில் பந்தை அதிகம் பாஸ் செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக இந்திய வீரர் சிம்ரன்ஜித் அற்புதமான கோல் அடித்து மிரட்டினார். இறுதியில், இந்திய அணி இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றியை ருசித்துள்ளது.
முதல் மூன்று போட்டிகள் போல் அல்லாமல், இப்போட்டியில் கோல்கீப்பரின் உதவியால் இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.