2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வகையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் 3-0, இரண்டாவது போட்டியில் 5-0, மூன்றாவது போட்டியில் 4-4 என டிரா செய்ய, நான்காவது போட்டி நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மலேசிய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை இந்திய கோல்கீப்பர் சவிதா சாதுர்யமாக செயல்பட்டு தடுத்தார். இதனையடுத்து, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இருஅணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. இதனையடுத்து, 55ஆவது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஆட்டத்தின் முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனையடுத்து, வேறு கோல்கள் ஏதும் விழாததால் ஆட்ட நேர முடிவில் 1-0 என இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்டத் தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.