டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுமார் ஒருமாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி மீண்டும் தற்போது பெங்களூருவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹாக்கி வீரர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூருக்கு திரும்பியுள்ளனர்.
பெங்களூரு திரும்பிய அனைத்து வீரர்களுக்கும் முதலில் ரேப்பிட் டெஸ்ட் மூலம் கரோனா கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில், அனைத்து வீரர்களுக்கும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. இருப்பினும், இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்திர குமார் ஆகியோருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதன் காரணமாக மன்பிரீத் சிங், சுரேந்திர குமார் ஆகியோருடன் பயணம் செய்த 10 வீரர்களுக்கு RT-PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார் ஆகிய நான்கு வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சில வீரர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்கு வீரர்களும் பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மற்ற வீரர்களுடன் தொடர்பில் இல்லை என்பதால் பயிற்சி எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், "பயிற்சி மையத்தில் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இங்குள்ள அலுவலர்கள் நிலைமையை கையாண்ட விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஊர் திரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு கரோனா சோதனையை கட்டாயமாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அந்த முக்கிய நடவடிக்கைதான் சரியான நேரத்தில் இந்தச் சிக்கலை (கரோனா பாதிப்பு) அடையாளம் காண உதவியது. நான் நன்றாக இருக்கிறேன்; மிக விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூன்று டயர்களுடன் வெற்றிக்கான கோட்டினைக் கடந்த ஹேமில்டன், கடைசி நிமிடத்தில் பரபரப்பு!