சீரி ஏ கால்பந்து தொடர் இத்தாலியின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி - உதினீஸ் கால்சியோ அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் 31ஆவது நிமிடத்திலேயே ஜுவென்டஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜுவென்டஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுவென்டஸ் அணிக்கு ஃபெடரிகோ சிசா ஆட்டத்தின் 49ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
பின்னர் ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டுமொரு கோலடிக்க ஆட்டம் ஜுவென்டஸ் அணிக்கு சாதகமாக மாறியது. பின்னர் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸ் அணியின் பவுலோ டைபாலா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இறுதிவரை போராடிய உதினீஸ் கால்சியோ அணி ஆறுதலுக்காக 90ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது. இதன்மூலம் ஜுவென்டஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் உதினீஸ் கால்சியோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், கால்பந்து விளையாட்டில் அதிக கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக கால்பந்து ஜாம்பவான் பீலே 757 கோல்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது ரொனால்டோ 758 கோல்களை அடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் கால்பந்து ஜாம்பவான் ஜோசப் பிகான் 805 கோல்களை அடித்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலிக்கு எக்கோ கார்டியோ கிராஃபி பரிசோதனை - மருத்துவமனை தகவல்