கரோனா வைரஸ் காரணமாக பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கால்பந்து போட்டிகளை ஜூன் மாதத்தில் தொடங்க பிரீமியர் லீக் நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், வீரர்கள் தகுந்த இடைவெளியுடன் பயிற்சியை மேற்கொள்ள அரசு அனுமதித்தது. இந்நிலையில், பிரீமியர் லீக் போட்டிகளுக்கு தயாராகும் வீரர்களுக்கான இரண்டாம் கட்ட வழிகாட்டுதல்களை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
அதில், ''பிரீமியர் லீக் தொடருக்கு தயாராகி வரும் வீரர்கள் 2 மீ சமூக இடைவெளியைப் பின்பற்றினாலே போதுமானது. இதன்மூலம் வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட முடியும். மனதளவிலும், உடலளவிலும் தயாராக உதவியாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதும் மூலம் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்கும், சுகாதார பாதுகாப்புடன் இருக்கவும் உதவும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் அணி முதலிடத்திலும், மான்செஸ்டர் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஜெர்மனியின் பண்டஸ்லிகா தொடர் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிரீமியர் லீக் தொடர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எதிர்படுத்தியுள்ளது. மேலும் ஸ்பெய்னின் லாலிகா தொடர் ஜூன் 8ஆம் தேதி தொடங்கலாம் என அந்நாட்டு பிரதமர் பெட்ரோ அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களின்றி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்டெஸ்லிகா: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்திய பேயர்ன் முனிச்