கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர் மெஸ்ஸியா அல்லது ரொனால்டோவா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் முன்னாள் கால்பந்து ஜாம்பவன்களும் தங்களுக்கு பிடித்தமான சிறந்த வீரர் பற்றிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது முன்னாள் இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளின் கேப்டன் வெய்ன் ரூனி, சர்வதேச கால்பந்தாட்டத்தைப் பொறுத்த வரையில் ரொனால்டோவை விட மெஸ்ஸியே சிறந்தவர் என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரூனி கூறுகையில், ரொனால்டோவுடன் நான் ஒன்றாக விளையாடிய போது அவர் தனது இலக்குகளில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர் உலகின் சிறந்த வீரராக இருப்பதை நீங்கள் காணலாம். அவர் தனது தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலமாகவே இதனைப்பெற்றுள்ளார்.
ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருமே இவ்விளையாட்டுக்கு கிடைத்த மிகச்சிறந்த வீரர்கள். நான் ரொனால்டோவின் நண்பராக இருந்தாலும், இவர்களுள் யார் சிறந்தவர் என்று கேட்டால் நான் மெஸ்ஸிக்கு வாக்களிப்பேன். ஏனெனில் மெஸ்ஸியின் ஆட்டத்திறன் மற்றவர்களை விட தனித்துவம் வாய்ந்தது. ஒருமுறை நான் அவருடன் விளையாடிய போது அவர் சாமர்த்தியமாக என்னிடமிருந்து பந்தை கைப்பற்றியது இன்றும் என் நினைவை விட்டு நீங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்டத்தின் ஜாம்பவானாக வலம் வந்த வெய்ன் ரூனி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் தனது நண்பரை விட்டு மெஸ்ஸியை சிறந்த கால்பந்தாட்ட வீரராக ரூனி தேர்வு செய்துள்ளது ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:நிதியளிக்க 'சாதனை பேட்'டை ஏலத்தில் விற்கும் முஷ்பிகுர்!