சிரி ஏ கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (செப்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, ரோமா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.
இரு அணி வீரர்களும் தொடக்க முதலே கோலடிக்க ஆயத்தம் காட்டி வந்தனர். அப்போது ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரோமா அணியின் ஜோர்டன், அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் கிடைத்த கூடுதல் நேரத்தையும் பயன்படுத்தி இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரோமா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் விஷ்வரூபம் எடுத்த ஜுவென்டஸ் அணிக்கும் ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் அட்ரியன் ரபியோட் கோலடித்து நம்பிக்கையளித்தார்.
பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொனால்டோ, 69ஆவது நிமிடத்தில் கோலடித்து போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தும், அவர்களால் இயலவில்லை.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ரோமா - ஜுவென்டஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: நேருக்கு நேர்..! ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்!