கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின்றி கால்பந்து தொடர்களை நடத்த பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு வந்தன. அந்த வகையில், ஜெர்மனியில் பண்டஸ்லிகா கால்பந்து தொடர் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து லா லிகா, பிரீமியர் லீக் ஆகிய தொடர்களும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடர் சென்ற 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நட்சத்திர அணியான யுவண்டஸ் அணி நேற்று களமிறங்கியது. யுவண்டஸ் அணிக்கு எதிராக போலோக்னா அணி ஆடியது.
இதில், தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் யுவண்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து அதே அணியின் டைபாலா 36ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க, முதல் பாதியின் முடிவில் யுவண்டஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் போலோக்னா அணியால் கோல்கள் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் யுவண்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலோக்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யுவண்டஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நீண்ட நாள்களுக்குக் பிறகு நட்சத்திர வீரர் ரொனால்டோ கால்பந்து போட்டியில் களமிறங்கியதால், அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கேப்டன் ராகுல் டிராவிட்டிற்கு போதிய மதிப்பை நாம் கொடுக்கவில்லை: கம்பீர்