இத்தாலியில் கடந்த பிப்ரவரி, மார்ச் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தில் இருந்த கரோனா வைரஸின் தாக்கம் மே மாதத்தில் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து அந்நாட்டில் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் கோபா இத்தாலி தொடர் மூலம் மீண்டும் தொடங்கியது.
இதனிடையே, அந்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2019-20 சீசனுக்கான சீரி ஏ கால்பந்து தொடர் நாளை முதல் பார்வையாளர்களின்றி தொடங்கவுள்ளது. இதில், பார்மா - டோரினா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இதில் பங்கேற்கும் கால்பந்து கிளப் அணிகளுக்கு தனிமைப்படுத்துதலின் விதிக்கப்பட்டிருந்த விதிகளில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ரோபர்டோ ஸ்பரேன்சா தெரிவித்துள்ளார்.
அதன்படி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வீரர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் வேறு யாரும் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் சீரி ஏ கால்பந்து தொடர் தொடங்குவது குறித்து இத்தாலி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கேப்ரியல் கிரவினா கூறுகையில், “மீண்டும் சீரி ஏ தொடர் தொடங்கவுள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களின்றி போட்டி நடைபெறுவது வருத்தமாக இருக்கிறது. அடுத்த மாதத்திலிருந்து ரசிகர்களின் முன்னிலையில் போட்டி நடைபெறும் என நம்பிக்கை உள்ளது” என்றார்.