கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து தொடரில் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 20) நடைபெற்ற லீக் போட்டியில் யுவென்டஸ் அணி லாசியோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியின் 51,54ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் ரொனால்டோ.
சீரி ஏ கால்பந்து தொடரில் அவர் அடித்த 50ஆவது கோல் இதுவாகும். இதன் மூலம், இங்கிலாந்தின் பிரிமியர் லீக், ஸ்பெயினின் லா லிகாவை தொடர்ந்து இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரிலும் 50 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
2003 முதல் 2008ஆம் ஆண்டு வரை பிரிமியர் லீக் தொடரில் மான்ஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல்கள், 2009 முதல் 2018ஆம் ஆண்டு வரை லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களை அடித்துள்ளார். 2018 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சீரி ஏ கால்பந்து தொடரில் ரொனால்டோ விளையாடிவருகிறார்.
சர்வதேச அளவில் போர்ச்சுகல் அணிக்காக இதுவரை 99 கோல்களை அடித்துள்ளார். இந்த வெற்றியின்மூலம், யுவென்டஸ் அணி இந்தச் சீசனில் விளையாடிய 34 போட்டிகளில் 80 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.