பாரிஸ் (பிரான்ஸ்): அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது 13ஆவது வயதிலிருந்து விளையாடி வந்த பார்சிலோனா கிளப் அணியில் இருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து, நேற்று (ஆக.9) செய்தியாளர்களை சந்தித்த அவர், மேடையில் கண்ணீர்விட்டு அழுதது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பார்சிலோனா - பிஎஸ்ஜி
இதையடுத்து, மெஸ்ஸி பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் எனும் பிஎஸ்ஜி அணியில் இணையும் பொருட்டு பிரான்சுக்கு பயணிக்க உள்ளார். மேலும், இரண்டு வருட ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பிரான்ஸ் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஓர் ஆண்டுக்கு 41 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் - ரூ.305 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பார்சிலோனா அணியில் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதற்காக தனது ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு குறைக்கவும் முடிவு செய்ததாக நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மெஸ்ஸி கூறினார். இருப்பினும், பார்சிலோனா அணியால் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
மார்சியோவின் திட்டம்
கடந்த வியாழக்கிழமை (ஆக.5) பார்சிலோனா அணி மெஸ்ஸியை அணியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்த பிறகு, பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் மார்சியோ போச்செட்டினோ மெஸ்ஸியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. மார்சியோவும் அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மெஸ்ஸி போன்ற தலைசிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு பெரிய அணிகளுள் பிஎஸ்ஜி அணியும் ஒன்று. கடந்த மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பை வென்றது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: நீரஜ் வென்ற தினம்... தேசிய ஈட்டி எறிதல் தினம்