இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் பாலா தேவி. இவர் இந்திய மகளிர் கால்பந்தில் முக்கியமான நட்சத்திரமாக இருந்துவருகிறார். இந்திய அணிக்காக 43 போட்டிகளில் களமிறங்கிய பாலா தேவி 36 கோல்களை அடித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ள அவர், இதுவரை 120 போட்டிகளில் பங்கேற்று 100 கோல்களை அடித்துள்ளார். இந்தியன் மகளிர் லீக்கின் கடந்த இரண்டு சீசன்களிலும் இவர் முன்னணி வீராங்கனையாக இருந்தார்.
அதுமட்டுமல்லாது அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதையும் இருமுறை (2014, 2015) பெற்றுள்ளார் பாலா தேவி. காவல் துறையில் பணியாற்றும் இவர் தற்போது மணீப்பூர் காவல்துறை கிளப் அணிக்காகவும் போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்திய அணியை தலைமைதாங்கும் இவர் அணியின் சிறந்த மிட்பீல்டர் ஆவார்.
இதனிடையே ஸ்காட்லாந்தின் கிளப்பான ரேஞ்சர்ஸ், பெங்களூரு எஃப்.சி அணியுடன் இணைந்து பாலா தேவியின் திறமையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதன்படி பாலா தேவியை தங்கள் அணியில் விளையாட வைப்பதற்காக முதற்கட்டமாக அவரை ஒருவார கால பயிற்சிக்கு அழைப்பு விடுத்தது.
அவர்களின் அழைப்பை ஏற்ற பாலா தேவி அங்கு சென்றார். ஒருவார பயிற்சிக்குப்பின் அவர் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. அவ்வாறு பாலா தேவி, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கிளப்பில் விளையாடினால், ஐரோப்பிய கால்பந்து லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் அடைவார்.