ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் இ பிரிவில், நேற்று நடைபெற்ற போட்டியில் தரவரிசையில் 103ஆவது இடத்திலிருக்கும் இந்திய அணி, 62ஆவது இடத்திலிருக்கும் கத்தார் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டி கத்தார் அணியின் சொந்த மண்ணில் நடைபெற்றதால், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் அணி ஆசிய சாம்பியன் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் என அவர்களது ரசிகர்கள் நினைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கத்தார் அணி தாக்குதல் (அட்டாக்கிங்) முறையில் விளையாடி 27 ஷாட்டுகளை அடிக்க முயன்றது. இந்திய அணியும் கத்தார் அணிக்கு ஈடுகொடுத்து விளையாடியது. இருப்பினும், கத்தார் அணி அடித்த பெரும்பாலான ஷாட்டுகளை இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து தடுத்து நிறுத்தினார். இதனால், இப்போட்டி 0-0 என்ற கோலின்றி டிராவில் முடிந்தது.
இப்போட்டி டிராவில் முடிந்ததன் மூலம், இந்திய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்போட்டி குறித்து கத்தார் அணியின் பயிற்சியாளர் ஃபெலிக்ஸ் சான்சேஸ் கூறுகையில்,
"எதிர்பார்த்ததைப் போலவே இப்போட்டி கடினமாகவே இருந்தது. கோல் அடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்தும் கோல் அடிக்க முடியாமல்போனது. இதற்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்துதான் காரணம். அவரால்தான் எங்களுக்கு கிடைக்கவேண்டிய மூன்று புள்ளிகள் கிடைக்காமல் போனது. ஆனாலும், இந்தத் தொடரில் இன்னும் பல போட்டிகளில் விளையாடவுள்ளதால், நிச்சயம் வெற்றிபெறுவோம்" என்றார்.