கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் தொடர் 80 நாள்களாக நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்ட ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் நட்சத்திர அணிகளான ஆர்சனல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் அமெரிக்காவில் நடந்து வரும் Black Lives Matter என்ற போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து நடந்த போட்டியில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. பின்னர் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட மான்செஸ்டர் சிட்டியின் ஸ்டெர்லிங் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதன்பின் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அந்த அணிக்காக கெவின் டி ப்ரூயின் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். பின்னர் 90ஆவது நிமிடம் வரை ஆர்சனல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு பின்னர் கூடுதலாக மீண்டும் இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் மான்செஸ்டர் சிட்டி அணியின் பில் மூன்றாவது கோலை அடிக்க, அந்த அணி 3-0 என்ற கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.