கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்பெருந்தொற்றினால் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள யூரோ 2020 கோப்பை கால்பந்து தொடர், பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியானது. ஆனால் அத்தகவலுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யூரோ 2020 என்ற பெயரை மாற்றுவதன் மூலம், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கூடுதலான செலவுகளை சந்திக்க நேரிடும். மேலும் பெயர் மாற்றத்தினால் பல்வேறுவகையான பிரச்னைகளையும், பங்குதாரர்களையும் சமாளிக்க நேரிடும். இதன் காரணமாக யூரோ2020 தொடரின் பெயரை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த யூரோ 2020 கால்பந்து தொடர், தற்போது நிலவிவரும் கரோனா பெருந்தொற்றின் அச்சம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுமென ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. இதேபோல் அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா தொடர், 2021 ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘நாட்டிற்காக பதக்கங்கள் வென்றாலும், ரேஷனுக்காக தவிக்கிறேன்’