பார்சிலோனா கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் மெஸ்ஸி. 2005ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணிக்காக 598 கோல் அடித்திருந்தார்.
இவரது சிறப்பான ஆட்டத்திறனால், பார்சிலோனா அணி லா லிகா, சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில், பார்சிலோனா - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரையிறுதிப் போட்டி நேற்று பார்சிலோனாவின் கேம்ப் நெள மைதானத்தில் நடைபெற்றது.
இதில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பார்சிலோனா அணி தரப்பில் அந்த அணியன் கேப்டனான மெஸ்ஸி, 75ஆவது நிமிடத்திலும், 82 நிமிடத்திலும் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்தார்.
குறிப்பாக, 82ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ஃப்ரீ கிக் ஷாட்டை லாவகமாக பயன்படுத்தி, கோல் அடித்து ரசிகர்களை வியப்படையச் செய்தார். இதன் மூலம், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 600 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். இதைத் தவிர, ஒரே கால்பந்து கிளப் அணிக்காக 600 கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.