சர்வதேச கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்களது சிறப்பான ஆட்டத்தால் நிரூபித்துவருகின்றனர். அந்த வகையில் லா லிகா கால்பந்து தொடரில் ரொனால்டோவின் சாதனை ஒன்றை தற்போது மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.
நடப்பு லா லிகா கால்பந்து சீசனில் கேம்ப் நெள மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது. இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி ஒரு பெனால்டி, இரண்டு ஃப்ரீகிக் என ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
லா லிகா கால்பந்துத் தொடரில் மெஸ்ஸி அடிக்கும் 34ஆவது ஹாட்ரிக் இதுவாகும். இதன் மூலம் லா லிகா கால்பந்துத் தொடரில் அதிக ஹாட்ரிக் கோல் அடித்த முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோவின் சாதனையை தற்போது மெஸ்ஸி சமன் செய்துள்ளார். 34 ஹாட்ரிக் கோல் அடிக்க ரொனால்டோவுக்கு 288 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மெஸ்ஸி 459 போட்டிகள் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஃப்ரீகிக்-கை பொருத்தவரையில், மெஸ்ஸி அளவுக்கு ஆகச்சிறந்த வீரர் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
ஏனெனில், கடந்த ஐந்து சீசனில் மற்ற ஐரோப்பிய கிளப் அணிகளை விட மெஸ்ஸி அதிகமுறை ஃப்ரீகிக் மூலம் கோல் அடித்து மிரட்டியுள்ளார். ஐந்து சீசன்களில் இதுவரை யுவென்டஸ் அணி 15, ஏ.எஸ்.ரோமா 13, பி.எஸ்.ஜி 13, லியான் 13 ஃப்ரீகிக் கோல்கள் மட்டுமே அடித்த நிலையில், மெஸ்ஸி 22 கோல் அடித்து அசத்தியுள்ளார்.
இதுமட்டுமில்லாது, கடந்த மூன்று சீசன்களில் மெஸ்ஸி 16 ஃப்ரீகிக் கோல் அடித்துள்ளார். ஆனால் ரியல் மாட்ரிட் அணி மூன்று ஃப்ரீகிக் கோல் மட்டுமே அடித்துள்ளது.