கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லா லிகா கால்பந்து தொடர், மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கி பார்வையாளர்களின்றி நடைபெற்றுவருகிறது.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, ரியல் மாலோர்கா அணியை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் 98 நாள்ளுக்குப் பிறகு களமிறங்கிய பார்சிலோனா அணி இரண்டாவது நிமிடத்திலேயே தனது முதல் கோலை அடித்து மிரட்டியது.
பின்னர் பார்சிலோனா மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் கேப்டன் மெஸ்ஸியின் பாஸை சக வீரர் மார்ட்டின் பிராத்வெயிட் கோலாக்கியதால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் ரியல் மாலோர்கா அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், மோசமான ஃபினிஷிங் காரணமாக அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. மறுமுனையில் பார்சிலோனா அணி 79ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தது. மெஸ்ஸியின் பாஸ் மூலம் ஜோர்டி ஆல்பா இந்த கோலை அடித்தார்.
அணியின் இரண்டு கோல்களுக்கு உதவிய மெஸ்ஸி தன்பங்கிற்கு ஆட்டத்தின் 90+3 நிமிடத்தில் அசத்தலான முறையில் கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இதனிடையே ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மெஸ்ஸியுடன் செல்பி எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் களத்தில் புகுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்களின்றி நடத்தப்படும் இந்தப் போட்டியில் ரசிகர் ஒருவர் எப்படி களத்தில் புகுந்தார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.